சிவகங்கை-சிவகங்கை பகுதியில் ஒரே நாள் இரவில் சி.ஐ.எஸ்.எப்.,வீரர்,மீன் வியாபாரி உட்பட 3 பேரை வாளால் தாக்கி நகை,பணம்,அலைபேசி வழிப்பறி செய்த,2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கையில் மார்ச் 25 அன்று இரவு சாமியார்பட்டி கண்மாயில் மீன் வாங்க வந்த வியாபாரி வரிச்சியூர் செக்கடியான் 38, என்பவரை 3 பேர் வாளால் தாக்கி ரூ.20 ஆயிரம், அலைபேசியை பறித்து சென்றனர்.
அப்போது நல்லாகுளம் அருகே டூவீலரில் வந்த அமராவதிபுதுார் சி.ஐ.எஸ்.எப்., நிர்வாக அலுவலர் மோகன சுந்தரேஸ்வரன் 35, அவரது மனைவி போலீஸ் புவனேஸ்வரியுடன் வந்தவரை வாளால் தாக்கி, அவரிடமிருந்து 1.2 பவுன் செயின், அலைபேசியை வழிப்பறி செய்தனர்.
அதே கும்பல் ஒக்கூர் அருகே இரவு 12:00 மணிக்கு டூவீலரில் காளையார் மங்கலம் சென்ற சந்தோஷ்குமார் 39, என்பவரையும் மிரட்டி ரூ.1,500, அலைபேசியை பறித்து சென்றனர்.
ஒரே நாள் இரவில் சிவகங்கை பகுதியில் பல்வேறு இடங்களில் கும்பல் 'மாஸ்க்' அணிந்து, நகை, பணம், அலைபேசியை வழிப்பறி செய்து தப்பியது அச்சத்தை ஏற்படுத்தியது.
2 பேர் கைது
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் போட்டோக்களை மானாமதுரை, சிவகங்கை போலீசார் சேகரித்து, பெண் போலீஸ் புவனேஸ்வரியிடம் காண்பித்தனர்.
அவர், வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலின் முகத்தை காண்பித்தார்.
இதையடுத்து சிவகங்கை டி.எஸ்.பி., சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் எஸ்.ஐ., ராமசந்திரன் உட்பட குழுவினர் பில்லுாரில் பதுங்கியிருந்த அழகுராஜன் மகன் ஜெயராமன் 23, அழுபிள்ளைதாங்கி கண்ணன் மகன் ஹரிகிருஷ்ணன் 20, இருவரையும் கைது செய்தனர். தப்பிச்சென்ற பில்லுார் ராசு மகன் பாலமுருகன் 20, என்பவரை தேடி வருகின்றனர்.
இவர்கள் மீது ஏற்கனவே மானாமதுரை, அருப்புக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் வழிப்பறி வழக்கு பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இக்கும்பலிடமிருந்து 1.2 பவுன் செயின், 3 அலைபேசி, ஒரு வாள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.