புதுச்சேரி : மாணவர் சுற்றுலா சங்கம் அனைத்து பகுதிகளிலும் அமைத்து தர வேண்டும் என லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ.,பேசினார்.
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறை போன்றே மீனவ மாணவர்களுக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்பதை வரவேற்கிறோம். ஏம்பலம் பகுதியில் மீன் மார்க்கெட் அமைத்து தர வேண்டும். மீனவ மக்கள் இறந்தால் அன்றே ஈமசடங்கு நிதி வழங்க வேண்டும்.
மழைக்காலத்திற்கு முன்பு ஏரி, குளங்களின் ஆக்கிரமிப்பை அகற்றி, . வாய்க்கால்களை துார் வாரி சீரமைக்கவேண்டும். கரிக்கலாம்பாக்கம்பேட், நரம்பை பனித்திட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். கொம்யூன் பகுதியில் சாலை பணி மந்தமாக நடக்கிறது. இதற்கு நிதி பற்றாக்குறையே காரணம். அவர்களுக்கு போதுமான நிதி வழங்க வேண்டும்.
கரிக்கலாம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் கட்டட வசதி இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். வரும் நிதியாண்டிலேயே புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும். பனித்திட்டில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும்.
கடல்சார்ந்த சுற்றுலா திட்டத்தை எனது தொகுதியில் எற்படுத்த வேண்டும். மாணவர் சுற்றுலா சங்கம் அனைத்து பகுதிகளிலும் அமைத்து தர வேண்டும். இதனால் புதுச்சேரி வரலாற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்றார்.