புதுச்சேரி : அரசு வழக்கறிஞர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என அசோக்பாபு எம்.எல்.ஏ.,பேசினார்.
மானிய கோரிக்கை மீதான விவாத்தில் அவர் பேசியதாவது;
புதுச்சேரியில், சென்னை ஐகோர்ட் கிளையை உடனே நிறுவி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் மேலும் புதுச்சேரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு வழக்கறிஞர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
கடலுார் சாலையில் உடனடியாக மேம்பாலம் கட்டி,போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். நுாறடி சாலையில் மேம்பாலத்திற்கு கீழ் சப்வே அமைக்கும் பணி, முதலியார்பேட்டை தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப்படாமல் உள்ளது.
நன்னீர் மீன்வளர்ப்பு திட்டங்களுக்கும் மானியம் அளித்து அரசு ஊக்குவிக்க வேண்டும். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் தான் புதுச்சேரியின் சுற்றுலா துறை மேம்பாடு அடையும். எனவே, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதுச்சேரி விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
மத்திய அரசு திட்டங்கள் வேளாண் துறையில் சரிவர செயல்படுத்தவில்லை. துறை அமைச்சர் தலையிட்டு அமல்படுத்த உத்தரவிட வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன. இந்த விஷயத்தில் அரசு தலையிட வேண்டும்.அனைத்து தனியார் நிறுவனங்களில் மகப்பேறு விடுப்பு கடைபிடிக்கவில்லை. இதனை அரசு கண்காணித்து செயல்படுத்த வேண்டும்.அமைச்சர்கள் மாறுவேடத்தில் சென்று துறைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.