புதுச்சேரி : மின்துறை ஊழியர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறுவது குறித்து சட்டத்துறை ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
நேரு: மின்துறையில்கூடுதலாக பல கட்டணங்களை சேர்த்து வசூலிக்கப்படுகிறது. கனெக்டெடு லோடு சார்ஜ் என்ற பெயரில் வீடுகளுக்கு கிலோ வாட்டிற்கு ரூ.30, கடைகளுக்கு ரூ.75 கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். தனியார் மயத்தை எதிர்த்து போராடிய மின்துறை ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் கனெக்டெடு லோடு சார்ஜ் என்ற பெயரில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை. பிற மாநிலங்களிலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம் நிர்ணயிக்கும் முறை உள்ளது. வழக்குகள் திரும்ப பெற சட்டத்துறை ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத்தை பொறுத்தவரை அரசு கொள்முதல், வினியோகம், விற்பனை ஆகியவகைளைத்தான் செய்கிறது. பிற முடிவுகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செய்கிறது. இதுபோன்ற சிக்கல்கள் வராமல் இருக்க, புதுச்சேரிக்கு என தனியாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுள்ளோம்.
செந்தில்குமார் : கனெக்டெடு லோடு சார்ஜ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது தெரியாமல் மக்கள் அதிகப்படியாக தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதனை மாற்றி குறிப்பிடச் செய்து, அவர்களுக்கு வரும் கட்டணத்தை குறைக்க வேண்டும். மின்தடைக்கு தீர்வு காண வேண்டும்.
நேரு: எனது தொகுதியில் தினமும் அரை மணிநேரம் மின் வெட்டு உள்ளது. ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எப்போது ரத்து செய்யப்படும்.
அமைச்சர்: புதுச்சேரியில் மின்தடை என்பது இல்லை. பராமரிப்பு, மரக்கிளைகள் உடைந்து விழுவது போன்ற காரணங்களால் மின்தடை ஏற்படுகிறது. அவைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. மின்துறையை நட்டத்தில் இருந்து மீட்டுள்ளோம். தற்போது லாபத்தில் இயங்குகிறது.
ஊழியர்கள் மீது எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டதோ அந்த விவகாரம் இன்னும் முடியவில்லை.அது முடியும்போது வழக்கும் முடிவிற்கு வந்துவிடும். இவ்வாறு விவாதம் நடந்தது.