புதுச்சேரி : வில்லியனுாரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி தலைவர் சிவா: வில்லியனுார் ரயில் நிலையத்தை மேம்படுத்த தென்னக ரயில்வே நிர்வாகத்திடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் தற்போதைய நிலை என்ன.
அமைச்சர் சந்திர பிரியங்கா: வில்லியனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும். கடந்த 14 ம் தேதி காணொளி வாயிலாக மத்திய ரயில்வே அமைச்சகத்துடன் கவர்னர் நடத்திய கூட்டத்தில் கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட புதுச்சேரி- திருப்பதி ரயிலை மீண்டும் இயக்கவும், அதனை வில்லியனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க புதுச்சேரி அரசு வாய்மொழியாக வலியுறுத்தியது. மத்திய அரசும் வாய்மொழியாக ஒப்புதல் அளித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: அனைத்து ரயில்களையும் மீண்டும் வில்லியனூர் ரயில் நிலையத்தில் நிறுத்த செய்ய வேண்டும். ரயில் ஏற மக்கள் புதுச்சேரிக்கு வர வேண்டியுள்ளது. வில்லியனுாரில் ரயில்கள் நின்று சென்றால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே வாய்மொழியான கோரிக்கையை கடிதம் மூலம் வலியுறுத்த வேண்டும்.
அமைச்சர்: கடிதம் எழுதப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.