புதுச்சேரி :
இரு மாநில பதிவு பெற்ற 6 ஆயிரம் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய் சரவணன் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
லட்சுமிகாந்தன்: குடிமைப்பொருள் வழங்கல்துறையில் புதிய ரேஷன்கார்டு, சிகப்பு கார்டு மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் கடந்த 4 மாதமாக பெறப்படாமல் உள்ளது அரசு அறியுமா? தகுதியான பயனாளிகளுக்கு சிகப்பு கார்டு வழங்கப்படுமா?
அமைச்சர் சாய்சரவணக்குமார்: சிகப்பு கார்டுகள் உச்சவரம்பைவிட அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய விண்ணப்பங்கள் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கூடுதல் ஒதுக்கீடு பெற்ற பின் சிகப்பு ரேஷன்கார்டு மாற்ற விண்ணப்பம் பெறப்படும். பதிவேற்றம், பராமரிப்பு பணிக்காக நிர்வாக காரணங்களால் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. தகுதியற்ற சிகப்பு கார்டுகள் நீக்கப்பட்டு, தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனிபால் கென்னடி: இரு மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன? புதுச்சேரியை சொந்த மாநிலமாக கொண்டவர்கள் வெளிமாநிலத்தில் பதிவு செய்துள்ளதை ரத்து செய்ய அரசு முன் வருமா?
அமைச்சர்: மத்திய அரசு அளித்த இரட்டை கார்டு நீக்க பட்டியல் அடிப்படையில் அட்டைகள் நீக்கப்பட்டு வருகிறது. சுமார் 6 ஆயிரம் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளது. ரேஷன்கார்டு பெற்றவர்கள் விபரங்கள் ஆன்லைன் போர்ட்டலில் பகிரப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சொந்த தகவல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செந்தில்குமார்: என் தொகுதியில் தகுதியற்றதாக நீக்கப்பட்ட சிகப்பு கார்டு எண்ணிக்கைக்கு ஏற்ப, அதே எண்ணிக்கையில் தகுதியான புதிய சிகப்பு கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
அமைச்சர்: உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தவறுகள் களையப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.