சோழவந்தான் -சோழவந்தான் நாச்சிகுளத்தில் திறக்கப்படாத துணை வேளாண் விரிவாக்க மையம் காட்சிப்பொருளாக உள்ளது.
நபார்டு திட்டத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் இதனை கட்டியுள்ளனர். கட்டுமான பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை.
இதனால் மேல நாச்சிக்குளம், கரட்டுப்பட்டி, இரும்பாடி, கருப்பட்டி பகுதி விவசாயிகள் விதை நெல், உரம், தார்பாலீன் உள்ளிட்ட உபகரண தேவைக்காக 10 கி.மீ., தொலைவில் உள்ள வாடிப்பட்டி, சோழவந்தானுக்கு செல்வதால் பணம், காலம் விரயமாகிறது.
விவசாயி சுப்பிரமணி கூறியதாவது: விதை நெல் உள்ளிட்ட இடுபொருள் வாங்க அலைந்து திரிய வேண்டியுள்ளது. இதற்காக இப் பகுதிக்கு வேளாண் விரிவாக்க மையம் வேண்டும் என கலெக்டரிடம் தெரிவித்தோம்.
பொது மக்கள் சேர்ந்து நிதி திரட்டி, தனியாரிடம் நிலம் பெற்று கட்டடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து 2 ஆண்டுகளாகியும் திறக்காமல் இழுத்தடிக்கின்றனர், என்றார்.
விவசாயிகள் சங்க தலைவர் ரமேஷ் கூறியதாவது: இம்மையத்தின் முன்பு செல்லும் கால்வாயில் இரண்டடி அகல குழாய் பதித்து, மேல்புறம் கான்க்ரீட் போட்டுள்ளனர். தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு தேங்குகிறது. இதனால் விவசாயமும், இம்மையமும் பாதிப்படைகிறது. எனவே 5 அடி அகலத்தில் கான்கிரீட் பாலம் அமைத்து, இம்மையத்தை திறக்க வேண்டும். முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.