புதுச்சேரி : தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க பரீசிலிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
நாகதியாகராஜன்: தாய், தந்தை என இருவரையும் இழந்து பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டம் உள்ளதா..
அமைச்சர் நமச்சிவாயம்: சாத்திய கூறுகள் குறித்த பரீசிலிக்கப்படும்.
செந்தில்குமார்: கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பள்ளி கல்வி மட்டுமின்றி, கல்லுாரி வரை அரசு படிக்க வைக்க வேண்டும்.-
சம்பத்: பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளை மட்டுமின்றி, கொரோனாவில் வருமானத்தை ஈட்டும் தாய்,தந்தையரில் ஒருவர் இறந்திருந்தாலும் கூட இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
நேரு: விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து பிரிந்த பெண்களின் குழந்தைகள் சான்றிதழ்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு தந்தை வழியில்லாமல் தாய்வழியில் ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.
நாகதியாகராஜன்: பெற்றோரை இழந்த குழந்தைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் யாருடைய வீட்டிலே தான் தங்கி படிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.
அமைச்சர்: குடும்ப தலைவிக்கு மாதாந்திர உதவி திட்டத்தை அண்மையில் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். விடுபட்டவர்களுக்கு மாதாந்திர உதவி வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். எனவே 21 வயது வரை தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு, மாதாந்திர உதவித் தொகை வழங்க பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.