புதுச்சேரி : மீனவ சமுதாய மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை இலவசமாக வழங்க சாத்திய கூறுகள் ஆராயப்படும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
பிரகாஷ்குமார்: ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோன்று, மீனவ சமுதாய குழந்தைகளுக்கும் வழங்கப்படுமா.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: சாத்தியகூறுகள் ஆராயப்படும்.
பிரகாஷ்குமார்: மீனவர்களுக்கு தற்போதுள்ள 2 சதவீத இட ஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்படுமா.
அமைச்சர்: வரும் 2023-24ம் கல்வி ஆண்டில் இருந்து சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மேற்படிப்பு படிக்கும் மீனவ சமுதாய மாணவர்களுக்கு அட்டவணையின, பழங்குடியின நலத்துறையால் வழங்கப்படும் கல்வி நிதியுதவிக்கு நிகராக வழங்கப்படும் என முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதனை செயல்படுத்த ஆவணம் செய்யப்படும். இட ஒதுக்கீடு உயர்த்துவது தொடர்பாக சமூக நலத் துறைக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.