மதுரை -மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி கிரேடு 2 மாணவி நட்சத்திரா, சர்வதேச அபகாஸ் மெய்நிகர் நேரலை போட்டியில் 'சாம்பியன்' பட்டம் வென்றார்.
துபாயை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'பிரைனோ பிரைன்' என்ற சர்வதேச கணிதத் திறன் அமைப்பு சார்பில் 9வது அபகாஸ் மெய்நிகர் நேரலைப் போட்டிகள் நடந்தது. 45 நாடுகளை சேர்ந்த பல ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
மதுரை அவனியாபுரம் 'பிரைனோ பிரைன்' கிளை மூலம் பங்கேற்ற மாணவி நட்சத்திரா சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஏற்கனவே யுனெஸ்கோ நடத்திய ஓவியப் போட்டியில் முதல் பரிசு வென்றவர். இவரை பள்ளி முதல்வர் சூர்யபிரபா, ஆசிரியைகள் பாராட்டினர்.