புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை வளாகத்தில் தேசிய பாதுகாப்பு கழகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதற்கான ஒப்பந்தத்தில் புதுச்சேரி பொறியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் மற்றும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழக துணைவேந்தர் பிமல் படேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு கலந்து கொண்டனர்.
ஒப்பந்தம் குறித்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரியை கல்வி மையமாக வலுப்படுத்தும்.
மாணவர்களின் நலனில் எனது அரசு கவனம் செலுத்தி வருவதால், புதுச்சேரியிலேயே மாணவர்கள் சிறப்புக் கல்வியைத் தொடர இது கூடுதல் பயனாக இருக்கும்.
தேசத்தின் உள் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க உதவும்.
ராஷ்டிரிய ரக்ஷா பல்கலையின் புதுச்சேரி வளாகம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றார்.