வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.
முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்ற பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையில் கண்காணிப்புக் குழு உள்ளது. இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அணையில் நடைபெற வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்படும்.
இக்குழுவில் உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியம், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனதுறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் வேணு, நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் இடம் பெற்றுள்ளனர். இக்குழு 2022 மே 9ல் அணையின் நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தபோது அணைப் பகுதியில் ஆய்வு நடத்தியது. அதன் பின் நேற்று இக்குழு ஆய்வு மேற்கொண்டது.அணையில் நீர்மட்டம் 116.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) குறைந்துள்ள நிலையில் அணைப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து இக்குழு ஆய்வு மேற்கொண்டது.
![]()
|
மெயின் அணை, பேபி அணையை பார்வையிட்டது. நீர்க்கசிவு காலரியில் தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்திற்கேற்ப நீர்க்கசிவு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அது சரியான அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் இயக்கி பார்க்கப்பட்டது. இயக்கமும் சரியாகவே இருந்தது. இந்த ஆய்வில் பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற் பொறியாளர்கள் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் உடன் இருந்தனர். ஆய்வு முடிந்தவுடன் குமுளியில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அணை பலமாக உள்ளது
வல்லக்கடவிலிருந்து அணைப் பகுதிக்கு வரும் வனப்பாதையை ஆய்வு செய்தோம். அதை சீரமைப்பதற்கான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். அணை பராமரிப்பு பணிகளுக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அணையை ஒட்டியுள்ள பேபி அணை பலப்படுத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீர், நீர்மட்டத்திற்கு ஏற்ப சரியான அளவிலேயே உள்ளது. ஷட்டர்களின் இயக்கமும் சரியாகவே உள்ளது.
விஜய்சரண் மத்திய கண்காணிப்பு குழு தலைவர்
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு நடத்தும் போது தமிழக,-கேரள பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஆய்வுக்கு அணைப்பகுதிக்குச் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அணையில் நடக்கும் உண்மை நிலவரம் வெளிக் கொண்டுவரவிடாமல் மறைக்கப்படுவதாக தமிழக விவசாய சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர்.