வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: பால் கொள்முதல் அளவு குறைந்துள்ள சூழலில் ஆவின் பால் பாக்கெட்களில், 3.5 சதவீதம் கொழுப்பு சத்தும், 8.5 சதவீதத்திற்கு கொழுப்பு அல்லாத இதர சத்துக்களுடனும் பால் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை, சிறுவாணி ரோடு, பச்சாபாளையத்திலுள்ள ஆவின் பால் உற்பத்தி மையத்தில் தினமும், 2.20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. முன்பு சப்ளை செய்யப்பட்ட பாலில் கொழுப்பு சத்து, 4.5 சதவீதமும், கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள், 10.5 சதவீதமும் இருந்தது.

தற்போது, பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளதால் கொழுப்பு, 3.5 சதவீதமும், இதர சத்துக்கள், 8.5 சதவீதமாக என, பாலின் அடர்த்தி குறைந்துள்ளது. இதனால், பாலை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரமும் குறைந்துள்ளது.
கோவை ஆவின் பொது மேலாளர் ராமநாதன் கூறியதாவது:
கோடை துவங்கும் முன்பே நாங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். தற்போது, ஆவின் நிறுவனத்துக்கு கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு குறைந்துவிட்டது. அதனால், பாலில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத இதர சத்துக்களின் அளவும் குறைந்துவிட்டது; இது தவிர்க்க முடியாது.
கோமாரி உள்ளிட்ட நோய்களால் ஏராளமான கால்நடைகள் இறந்துவிட்டதால், பால் கொள்முதல் அளவு குறைந்து விட்டது. தற்போது, கொள்முதல் செய்யும் போதே கொழுப்பு அளவு, 3.8 சதவீதம் தான் இருக்கிறது.
அதை சில நிலைகளுக்கு உட்படுத்தினால், 3.5 சதவீதமாகிவிடுகிறது; கோடை முடியும் வரை இதே நிலைதான் நீடிக்கும். நாங்கள் வாடிக்கையாளரை ஏமாற்றவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.