வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட வழித்தடத்தில், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலர் எட்வர்ட் ஜெனி ஆகியோர் கூறியதாவது: சென்னை - கோவைக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை வரவேற்கத்தக்கது. இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட தடத்தில், வந்தே பாரத் இயக்காதது ஏன் என தெரியவில்லை.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 740 கி.மீ., வழித்தடத்தில், சென்னை -- திருநெல்வேலி இடையே முழுதும் மின்மயமாக்கல் உடன் கூடிய, இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க உள்ளனர். எனவே, இந்த தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க போதிய வசதி வாய்ப்புகள் உள்ளன.
மற்ற முக்கிய வழித்தடத்தில் இருப்பதுபோல், தென் மாவட்டங்களுக்கு பகல் நேர அதிவிரைவு ரயில்களின் சேவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. பயணியரின் அத்தியாவசிய தேவையாக கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.