சென்னை : ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., நிர்வாகம் கலைக்கப்பட்டது. புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக 66 மாவட்டங்களாக செயல்படும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவராக கதிரவன் என்பவர் இருந்தார். அவரின் கீழ் துணை தலைவர், பொதுச் செயலர்கள், பொருளாளர் உள்ளிட்ட மாவட்ட மைய குழு உள்ளது.
அதில் சில நிர்வாகிகளுக்கு இடையில் நிலவும் மோதலால், கட்சி பணியில் சரிவர ஈடுபடாமல் இருப்பதாக, மாநில தலைவர் அண்ணாமலைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்படுவதாக, அண்ணாமலை அறிவித்தார்.
அவரின் அறிக்கையில், 'ராமநாதபுரத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட இருப்பதால், தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகின்றன. புதிய நியமன விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்' என கூறியுள்ளார்.
ராமநாதபுரம் புதிய தலைவராக தரணி முருகேசன் என்பவர் நியமிக்கப்படுவதாக, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.