ஒரு தொகுதி வேட்பாளர் இறந்தாலோ, பதவியை ராஜினாமா செய்தாலோ, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல், நடப்பது வழக்கம். நாட்டிலேயே முதல் இடைத்தேர்தலை சந்தித்த தொகுதி என்ற பெருமை, கர்நாடகாவின் தரிகெரேக்கு உள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், கர்நாடக சட்டசபைக்கு முதன் முறையாக, 1952ல் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தொகுதியில், கிசான் மஸ்துார் பிரஜா கட்சியின் சார்பில் நாகப்பாவும், காங்கிரஸ் சார்பில் பசப்பாவும் போட்டியிட்டனர்.
ஓட்டு எண்ணிக்கை முடிவில் 8,093 ஓட்டுகள் பெற்று, நாகப்பா வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, பசப்பா 8,059 ஓட்டுகள் பெற்று, 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நாகப்பா முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், அவர் வெற்றி செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற கதவை பசப்பா தட்டினார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, அரசியல் தொடர்பான முதல் வழக்கும் இது தான். நீண்ட விசாரணைக்கு பின், தோல்வி அடைந்த பசப்பா, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆனால் 1956ல் பசப்பா உடல்நலக் குறைவால் இறந்தார். இதனால் அதே ஆண்டில், இடைத்தேர்தல் நடந்தது. சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் இடைத்தேர்தல் இது தான்.
இந்த தேர்தலில், பசப்பாவின் சகோதரர் சாந்தப்பா வெற்றி பெற்றார். முதல் தேர்தலில் ஒரே தொகுதியில், மூன்று எம்.எல்.ஏ.,க்களை பார்த்ததும், தரிகெரே தான். இதனால் இந்திய அரசியல் வரலாற்றில், தரிகெரேவுக்கு தனி இடம் உண்டு.