பெங்களூரு-கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாஸ், தன் பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் காங்கிரசில் இணைவது உறுதியாகியுள்ளது.
துமகூரு மாவட்டம், குப்பி சட்டசபை தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாஸ். இவர், ஒரே தொகுதியில் 2004, 2008, 2013, 2018 ஆகிய நான்கு தேர்தலிலும் அபார வெற்றி பெற்றார்.
குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, தொடக்க கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின், திடீரென கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்டார். குமாரசாமியும், குப்பி தொகுதிக்கு மற்றொரு வேட்பாளர் பெயரை அறிவித்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, பெங்களூரு விதான் சவுதாவில், சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரியிடம் நேற்று சீனிவாஸ் கடிதம் கொடுத்தார்.
அவரது ராஜினாமா கடிதத்தை, நேற்று மாலையே சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். விரைவில் காங்கிரசில் இணைந்து மீண்டும் குப்பி தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதற்காகவே, அந்த தொகுதி வேட்பாளர் பெயரை காங்கிரஸ் நேற்றிரவு வரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.