காஞ்சிபுரம் : துாத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன், 73. ஆன்மிகவாதியான இவர், யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்.
யாசகம் மூலமாக கிடைக்கும் பணத்தை கொரோனா நிவாரண நிதி மற்றும் அரசு பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வந்த அவர் முதல்வர் நிவாரண நிதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினார்.
இதற்கு முன் பல மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்தியதற்கான வங்கி ரசீதுகளை, சேகரித்து வைத்துள்ளார்.
இதுகுறித்து, பாண்டியன் கூறியதாவது: எனக்கு திருமணமாகி மனைவி, மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த, 1980ம் ஆண்டு குடும்பத்தை பிரிந்து ஆன்மிகத்திற்கு வந்துவிட்டேன். நான் யாசகம் எடுக்கும் பணத்தில், கடந்த வாரம்செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் நிவாரண நிதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன்.
இந்த வாரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளேன். இது, எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இவ்வாறு அவர்கூறினார்.