வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் கட்சியின் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதை காட்டுவதாக சோனியாவிடம் மூத்த தலைவர்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசிய அவதுாறு வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. லோக்சபா எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில் பிரதமர் வேட்பாளராக பேசப்பட்டு வரும் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கட்சியின் உச்சபட்ச தலைவர் மீது மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சாதாரண அவதுாறு வழக்கை கூட திறம்பட நடத்த முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்டமைப்பு சீர்குலைந்து விட்டதாக மூத்த தலைவர்கள் சோனியாவிடம் கவலை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறியதாவது: ராகுல் மீதான வழக்கு மிக மிக சாதாரணமானது. 2019-ல் கர்நாடகாவில் பேசியதற்கு குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சாதாரணமாக இந்த வழக்கை கவனித்திருந்தாலே கர்நாடக மாநிலத்திற்கோ ராகுல் வசிக்கும் டில்லி உயர் நீதிமன்றத்திற்கோ மாற்றியிருக்க முடியும்.
மோடி என்ற சமூகத்தை ராகுல் அவமதித்து விட்டார் என்பதே வழக்கு. ஆனால் மோடி என்ற சமூகமே இல்லை. மோத் வானிக் மோத் காஞ்ச்சி சமூகத்தினர்தான் மோடி என்ற பெயரை பயன்படுத்துகின்றனர். பிரதமர் மோடியை விமர்சித்துதான் ராகுல் பேசியிருக்கிறார்.
ராகுல் குறிப்பிட்ட லலித் மோடி நிரவ் மோடி ஆகியோரும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். இவற்றையெல்லாம் நீதிமன்றத்தில் எடுத்து வைத்திருந்தாலே வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கும்.
ஆனால் 138 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட 55 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி நேரு குடும்ப வாரிசான ராகுலின் வழக்கை திறம்பட கையாளவில்லை.
இத்தனைக்கும் ராகுல் சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருக்கிறார். ஒரு அரசியல் கட்சி என்றால் கட்சியில் என்ன நடக்கிறது; கட்சியை சுற்றிலும் முக்கிய தலைவர்களை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கண்காணித்து பிரச்னைகளுக்கு தீர்வு காணும் கட்டமைப்பு இருக்க வேண்டும்.வலுவான வழக்கறிஞர் அணியும் வழிநடத்த அனுபவம் வாய்ந்த தலைவர்களும் இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் வகுக்க முடியும். ஒரு காலத்தில் இதில் காங்கிரஸ் வலுவாக இருந்தது.
தொடர்ந்து இரு முறை தேர்தலில் தோற்றதும் காங்கிரஸ் கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. அதன் விளைவுதான் ராகுலுக்கு கிடைத்த தண்டனை. இவ்வாறு அவர்கள் கூறினர்.