தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி:
கோடை சீசனின் போது, ஊட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வருகிறார். படகு இல்லம் உட்பட சுற்றுலா மையங்களில், எவ்வித ஆக்கிரமிப்பும் இருக்கக் கூடாது. உடனடியாக அவற்றை அகற்ற உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதெல்லாம் சரி... ஆக்கிரமிப்பு அகற்றும் போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வரிஞ்சி கட்டிட்டு அதிகாரிகளிடம் சண்டைக்கு போகக் கூடாதுன்னு, உங்க கட்சி கவுன்சிலர்களுக்கு முதலில் உத்தரவு போட்டீங்களா?
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிக்கை:
பேச்சு, எழுத்து, கருத்துரிமைகள் உள்ளதால், யார், எதை வேண்டுமானாலும் பேசி, எழுத முடியாது. மற்றவர்களின் உரிமை, நாட்டின் மதிப்பு, மரியாதை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ராகுல், சில வார்த்தைகளை உணர்ச்சி வசப்பட்டு பயன்படுத்தியது, அவரது பதவியை பறிக்கும் அளவுக்கு சென்று விட்டது. அவரது பதவி பறிப்பு, அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம். மேடைகளில், ஊடகங்களில் பேசும் போது, சுய கட்டுப்பாடு, நிதானம் தேவை என்பதை, இது எடுத்துக் காட்டுகிறது.
சரியாகச் சொன்னீங்க... ஆனாலும், காங்கிரஸ்காரங்க திருந்தியதா தெரியலையே... 'இது வாங்கப்பட்ட தீர்ப்பு'ன்னு நீதிபதியையும், நீதிமன்றத்தையும் விமர்சனம் பண்றாங்களே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'ராகுலுக்கு வழங்கி இருப்பது பெரிய தண்டனை; நீதிமன்றம் இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்; அவசரப்பட்டு எம்.பி., பதவியை பறித்ததை பா.ஜ., தவிர்த்திருக்கலாம்' என்கிறார் பா.ம.க., தலைவர் அன்புமணி. இந்த கோரிக்கையை, நீதிமன்றத்தில் வைக்க வேண்டும். பதவியை பறித்தது அரசியல் சட்டம் தானேயன்றி, பா.ஜ., அல்ல என்பது, ஒரு எம்.பி.,க்கு தெரியாதது வியப்பளிக்கிறது.

'ஒரு எம்.பி.,யோட வேதனை, இன்னொரு எம்.பி.,க்கு தான் தெரியும்'ன்னு காட்டுறதுக்காக, ராகுலுக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்திருப்பாரோ என்னவோ?
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பேச்சு:
அ.தி.மு.க.,வில் தனி மனித ஆதிக்கம் கிடையாது. நான் இதுவரை தலைவர் என்ற வார்த்தையை கூறியது கிடையாது. எப்போதும் தொண்டன் தான். அ.தி.மு.க,வை யாராலும் அழிக்க முடியாது. பழனிசாமி இல்லாவிட்டால், யாராவது ஒருவர் அ.தி.மு.க.,வை ஆள்வார். தொண்டர்கள் இருக்கும் வரை, இந்தக் கட்சியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. 1.50 கோடி தொண்டர்கள் இருக்கும் வரை கட்சிக்கு யாராலும் உரிமை கொண்டாட முடியாது. தொண்டர்கள் ஆசிர்வாதத்தோடு நாம் மீண்டும் ஆட்சி அமைப்போம்.
தன் ஆதரவு, 'மாஜி'க்களை ஏவி விட்டு, கட்சிக்கு ஒற்றை தலைமைன்னு பேச வச்சு, அந்த தலைமையும் இவர் தான்னு சொல்ல வச்சிட்டு, இப்ப என்னவோ தன்னடக்கமா பேசுறாரு!