திருப்பூர் : கொரோனா அதிகரித்து வரும் நிலையில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் சுகாதாரத்துறையினர் தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுவோரை கவலை அடையச் செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் கடந்த 146 நாட்களில் இல்லாத வகையில் நேற்று முன்தினம் நாட்டில் 1596 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு நுாறை நெருங்கியுள்ளது. இதில் 39 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் மட்டும் தொற்று இல்லாத நிலை உள்ளது.
சென்னை கோவை செங்கல்பட்டு மாவட்டங்களில் இரட்டை இலக்கங்களில் தொற்று பதிவாகி வருகிறது. 24 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்தும்படி சுகாதாரத்துறை உஷார் படுத்தப் பட்டுள்ளது.
தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 31ம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காலநிலையில் மாற்றம் வந்துள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்'வழக்கமாக வெயில் அதிகமாகும் போது வைரஸால் ஏற்படும் காய்ச்சல் தாக்கம் குளிரின்போது ஏற்படக்கூடிய சளி இருமல் பாதிப்பு குறைவாக இருக்கும். தொடர்ந்து மழை பெய்தால் லார்வா கொசு உற்பத்தியும் அதிகமாகும். அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோடை வெயிலின் போது மழை வரும் வாய்ப்பு எப்போது குறைவாக இருக்கும்.
இந்த முறை துவக்கத்திலேயே பரவலாக மழை வர துவங்கிவிட்டது. கொரோனா அதிகரித்து வரும் இச்சூழலில் காலநிலையில் மாற்றம் காய்ச்சல் அதிகமாவதற்கான வாய்ப்பை உருவாக்கும்' என்றனர்.
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காய்ச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியிருப்பது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.