வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர் : திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரி அருகே காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடன் நெருங்கி பழகிய கிருஷ்ணராஜ் என்பவர், தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், பூஜை செய்து அதை எடுத்துத் தருவதாக கூறி, 25 லட்சம் ரூபாயை பறித்து தலைமறைவாகினார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த பின் முருகேசன் கூறியதாவது:
குடும்ப தகராறு காரணமாக என்னிடமிருந்து பிரிந்த மனைவி, அவிநாசிபாளையம் தோட்டத்தில் உள்ள தன் பாட்டி வீட்டில் வசிக்கிறார். மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க, 15 ஆண்டு நண்பரான, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், பாட்டி மற்றும் மனைவியிடம் பேச்சு நடத்தி வந்தார்.
'உங்கள் தோட்டத்தில் ஒரு வைப்ரேஷன் வந்தது. அங்கு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் உள்ளது. சில பூஜைகள் செய்தால் புதையலை எடுத்துவிடலாம். புதையலை எடுத்தால் தான் மனைவியுடன் சேர்ந்து வாழ முடியும்' என, தெரிவித்தார்.
புதையல் எடுக்க பூஜை செய்வதற்காக, கடந்த 2014ம் ஆண்டு முதல் தவணை முறையில் என்னிடமிருந்து, 25 லட்சம் ரூபாய் வாங்கி தலைமறைவாகிவிட்டார்.
பணத்தை திருப்பி கேட்டபோது, என் மனைவியை தகாத வகையில் சித்தரித்து 'வீடியோ' தயாரித்து வைத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார்.
அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.