வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.1.35 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிக்காக ஆர்வி அசோசியேஷன் என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூனில் அறிக்கை தயாரித்து மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் (சி.எம்.ஆர்.எல்.,) தெரிவித்துள்ளனர்.

மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வேளாண் கல்லுாரி வரையுள்ள 31 கிலோ மீட்டர் துாரம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியதன் அடிப்படையில் நான்கு நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் ஆர்வி அசோசியேஷன் என்ற நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
20 ஸ்டேஷன்கள் பரிந்துரை
இந்நிறுவனம் அளிக்கும் பரிந்துரைப்படி நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகள், போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப டிராக்குகளை உயரத்தில் அமைப்பதா, சுரங்கபாதையில் அமைப்பதா என மத்திய அரசு இறுதி செய்யும். திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 20 ஸ்டேஷன்களுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்நிறுவனம் அளிக்கும் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன்படி திருமங்கலம், கப்பலுார் டோல்கேட், தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்த நகர், மதுரைக் கல்லுாரி, மதுரை ரயில்வே ஸ்டேஷன், சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் ஆபீஸ், கோ.புதுார், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, ஒத்தக்கடை ஆகிய 20 ஸ்டேஷன்களுக்கு வாய்ப்புள்ளது.
இதில் ஒத்தக்கடை முதல் கோரிப்பாளையம் வரை, வசந்த நகர் முதல் திருமங்கலம் வரை மேம்பால பாதையாகவும் (எலிவேட்டட் டிராக்), வசந்த நகர் முதல் கோரிப்பாளையம் வரை சுரங்க பாதையாகவும் அமையவுள்ளது.
மேம்பால தண்டவாள பாதை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 350 கோடியும், சுரங்க பாதை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 800 கோடியும் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மூன்று பெட்டிகளுடன் இயங்கும் ரயிலின் வேகம் மணிக்கு 25 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை இருக்கும் வகையில் தண்டவாளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.