லஞ்ச வழக்கில் முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டதால், கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, நேற்று கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தாவணகெரே மாவட்டம், சென்னகிரி பா.ஜ., - எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, 70. கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவராக இருந்தார்.
இந்த நிறுவனத்திற்கு ரசாயனம் வழங்கும் டெண்டர் கொடுப்பதற்கு ஸ்ரேயாஸ் என்பவரிடம், மாடாலின் மகனும், பெங் களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைமை கணக்கு அதிகாரியுமான பிரசாந்த், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்.
அவரை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். மாடாலின் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனையில், 8.23 கோடி ரூபாய் சிக்கியது. அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், மார்ச் 7ல் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
முன்ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதன்ஷி சுலியா அடங்கிய அமர்வு, லோக் ஆயுக்தா மனுவுக்கு பதிலளிக்க, மாடால் விருபாக் ஷப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், நேற்று மதியம் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், மாடால் விருபாக் ஷப்பாவின் வழக்கு, நீதிபதி நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
லோக் ஆயுக்தா வக்கீல்கள், 'மாடால் விருபாக் ஷப்பா விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறுகிறார். மாடாலை காவலில் வைத்து விசாரிக்க வேண்டி உள்ளது. இதனால், அவரது முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டனர்.
இதன்படி, மாடாலுக்கு வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்து நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து, பெங்களூரு நோக்கி காரில் வந்து கொண்டிருந்த மாடாலை, துமகூரு கியாதசந்திரா சுங்கச்சாவடி அருகே, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.