சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின்போது, சபாநாயகர் அப்பாவு தன் தொகுதி சார்பாக, துணை கேள்வி கேட்டார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
காங்., - ராஜேஷ்குமார்: கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் பகுதியில் நீதிமன்றம் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது, 36 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அரசின் நிதிநிலையால், தாலுகாவுக்கு ஒரு நீதிமன்றம் என்ற கோரிக்கையை இந்த ஆண்டு பரிசீலிக்க இயலாது; வரும் ஆண்டில் பரிசீலிக்கப்படும்.
அ.தி.மு.க., - தனபால்: அவினாசி தொகுதியில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட கருத்துரு அனுப்பப்பட்டது. அது எந்த நிலையில் உள்ளது?
அமைச்சர் ரகுபதி: ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் தான் தற்போது அமைக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தில் இருந்து கோப்பு வந்த பின், நிதித்துறை ஆலோசனை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - எஸ்.ஆர்.ராஜா: தாம்பரத்தில் கூடுதல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படுமா?
அமைச்சர் ரகுபதி: உயர் நீதிமன்ற கருத்து பெறப்பட்டு, எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும்.
சபாநாயகர் அப்பாவு: என் தொகுதியில் ஒரு கேள்வி. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், திசையன்விளை, நாங்குனேரி தாலுகாவுக்குரிய கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், பாளையங்கோட்டையில் செயல்படுகின்றன.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வள்ளியூரில் சார்பு நீதிமன்றங்கள் கட்டப்பட்டு இட வசதி உள்ளது. மூன்று தாலுகாவுக்குரிய கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களை, பாளையங்கோட்டையில் இருந்து, வள்ளியூர் சார்பு நீதிமன்றத்துக்கு, இந்த ஆண்டு மாற்றித் தர முன்வருவீர்களா?
அமைச்சர் ரகுபதி: வள்ளியூரில் சார்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அங்கு நான்கு நீதிமன்றங்கள் உள்ளன. உங்கள் கோரிக்கையை ஏற்கனவே மனுவாக தந்தீர்கள். அந்த மனு உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த மனு மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.
சபாநாயகர் கேள்வி கேட்டபோது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'சுருக்கமாக கேளுங்கள்' எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.