பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு வரும் மார்ச்.30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஜூன் 30 வரை அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம், கடந்தாண்டு மார்ச்.,30ம் தேதி, பான் - ஆதார் இணைப்பிற்கானஅவகாசத்தை ஓராண்டு நீட்டிப்பதாக அறிவித்தது. இதன்படி, 2022 ஏப்.,1 முதல் 3 மாதங்களுக்குள் ரூ.500 அபராதம் செலுத்தி இணைத்து கொள்ளலாமென அறிவித்திருந்தது. அதற்கு பிறகு, ரூ.1,000 அபராத தொகையுடன் இணைக்க, வரும் மார்ச்.,31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
![]()
|
இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று (மார்ச்.28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூலை 1 முதல், ஆதார் எண் இணைக்கப்படாத பான் எண் செயலிழந்து விடும். செயலிழந்த பான் எண்கள் தொடர்புடைய கணக்குகளுக்கு ரீபண்டு, வட்டி உள்ளிட்டவை வழங்கப்பட மாட்டாது. வருமான வரிச்சட்டத்தின் கீழ், அதிக விகிதத்தில் டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் வரி பிடித்தம் செய்யப்படும். பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க ரூ.1,000 கட்டணம் செலுத்திய 30 நாட்களில் பான் எண் செயல்பட துவங்கும். தற்போது வரை 51 கோடிக்கும் மேற்பட்ட பான் எண், ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பான் - ஆதார் எண் இணைப்பிற்கு அவகாசம் வழங்கப்படுவது இது 5வது முறையாகும்.