வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பார்லி.,யின் இரு அவைகளும் 11வது நாளாக முடங்கின.

மோடி எனும் சாதியை அவதுாறாக பேசிய வழக்கில், காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், காங்., கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் 11வது நாளாக இன்று(மார்ச் 28) லோக்சபா கூடியதும் சபாநாயகர் இருக்கையை, காங்., - எம்.பி.,க்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் லோக்சபாவை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். 2 மணிக்கு துவங்கிய கூட்டத்தொடரிலும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா காலை கூடியதும் அமளி ஏற்படவே உடனடியாக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் அமளி தொடர்ந்தது. இதனையடுத்து ராஜ்யசபாவும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.