இந்தியாவில், 'ஹெபடைடிஸ் - பி' வகை கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும், 2030க்குள் அந்நோயை கட்டுப்படுத்தும் வகையில், 'தேசிய ஹெபடைடிஸ் - பி ஒழிப்புத் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு மூன்று தவணை, ஹெபடைடிஸ் - பி தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப் பட்டது. அதற்கு மருத்துவப் பணியாளர்கள் போதிய ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இதையடுத்து, அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:
கடந்தாண்டு செப்., 7ல் நடந்த சுகாதார திட்ட அலுவல் கூட்டத்தில், மருத்துவ பணியாளர்களுக்கு கல்லீரல் அழற்சி தடுப்பூசி செலுத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், 20 சதவீதம் பேர் மட்டுமே முறையாக தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
மீதமுள்ள, 80 சதவீதம் பேருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்தி, அதுகுறித்த தகவல்களை, பொது சுகாதாரத்துறை இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.