அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் ராணுவ அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.
கிருஷ்ணகிரியில், ராணுவ வீரரான பிரபு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, சென்னையில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான பாண்டியன் என்பவர், தமிழக அரசை விமர்சித்து பேசினார். 'ராணுவத்தில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்கள், துப்பாக்கியால் சுடுவதில், சண்டை போடுவதில் கெட்டிக்காரர்கள்; இதை செய்ய வைத்து விடாதீர்கள்' என, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
இதுகுறித்து, சென்னை, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி ஜெதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜரானார். 'மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன்' என, பாண்டியன் தரப்பில் உத்தரவாதம் அளித்து, மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்று, பாண்டியனுக்கு முன்ஜாமின் வழங்கி, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார். திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில், ஒரு வாரம் கையெழுத்திடும்படி, நிபந்தனை விதித்தார்.