ஆலங்குடியில் உள்ள இரண்டாவது குரு ஸ்தலமான, 700 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், 700 ஆண்டு பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத ஸ்ரீநாம புரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில், 1,305ம் ஆண்டு, சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு, 35 கல்வெட்டுக்கள் உள்ளன. சோழர், பாண்டியர் கால கல் துாண்களும் காணப்படுகின்றன.
காசி புராணத்தில், இந்த ஆலயத்தை பற்றிய செய்திகள் இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஸ்தலத்தில் தட்சிணாமூர்த்தி தனி கோவில் கொண்டுள்ளார்.
மகா சிவநாடி ஓலைச்சுவடியில், ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவில் குருபலம் மிகுந்த ஸ்தலம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே, ஜாதகம் மற்றும் கிரக ரீதியாக குரு பல மற்றும், குரு நீச்சமாகவும் இருப்பவர்கள் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை தரிசித்தால், இடர்பாடுகளில் இருந்து விடுபடுவர் என்ற ஐதீகம் இருப்பதால், இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்குகிறது.
இந்த கோவிலில், 700 ஆண்டுகளுக்கு பின், 1991 ஜூனில் முதல் கும்பாபிஷேகமும், 2007 ஜனவரியில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
அதன் பின், கோவிலில் திருப்பணிகள் செய்து, நேற்று மூன்றாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷே விழாவை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி முதல், யாகசாலை பூஜைகள் நடைபெற்று, நேற்று காலை 9:40 மணிக்கு, கோவில் ராஜகோபுரம், தர்மஸம்வர்த்தினி, ஸ்ரீநாமபுரீஸ்வரர், குருதெட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை உட்பட பரிகாரதெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.