புதுடில்லி: அனைவரும் ஏப்ரல் 15 முதல் மே 15ம் தேதி வரை தொகுதிகளில் ஆட்சியின் சிறப்பு குறித்து பிரசாரங்கள் செய்யுங்கள் என பாஜ., எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பாஜ., பார்லி மென்ட் குழுக் கூட்டம், பார்லி., வளாகத்தில் இன்று(மார்ச் 28) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல், கிரண் ரிஜிஜூ, பாஜ., எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதை அடுத்து, அதற்கு முக்கிய காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, நட்டா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கட்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. வெற்றியின் சுவையை அதிகம் சுவைத்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மற்றொரு பக்கத்தில் எதிர்ப்பும் அதிகரிக்கும். எனவே, கடுமையான போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.
அனைவரும் ஏப்ரல் 15 முதல் மே 15ம் தேதி வரை தொகுதிகளில் ஆட்சியின் சிறப்பு குறித்து பிரசாரங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு பாஜ., எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.