
பொதுவாக சென்னையில் இலக்கிய விழா என்றால் மேடையில் இருப்பவர்களை விட குறைவாகவே பார்வையாளர்கள் இருப்பர் அவர்களும் குனிந்த தலை நிமிராமல் தங்கள் மொபைல் போனில் முழ்கியிருப்பர்
இதை உடைத்து அரங்கு நிறைந்த கூட்டமாக தனது இலக்கிய விழாவினை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் எழுத்தாளர் நர்சிம்.
கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்று முன்னனி எழுத்தாளர்களே கொண்டாடும் எழுத்தாளர் நர்சிம் நிறைய புத்தகங்கள் எழுதியிருந்தாலும் அவரது மதுரைக் கதைகள் மற்றும் காழ் கவிதை தொகுப்பு பரவலான வாசிப்புக்கு உள்ளான புத்தகங்களாகும்.இதில் மதுரைத் தொகுப்பு இன்னும் விசேஷம் அதன் வட்டார நடைக்காகவே வாசகர்களால் கொண்டாடப்படும் புத்தகம் அது.

விழாவின் ஏற்புரையில் நர்சிம் பேசுகையில்..
மதுரை என்பது இன்னமும் கிராமத்தின் சாயலும் பண்பாடும் படிந்திருக்கும் அன்பு பூமிதான் அங்கே உருண்டு புரண்டு வளர்ந்த போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் என்னால் இன்னும் ஆயிரம் கதைகள் படைக்கமுடியும் படைப்பேன்.
பொதுவாக எனது கதையின் நாயகியர் மதுரைக்கே உரிய துணிச்சலும் தைரியமும் கொண்டவர்களாக சுயமாக முடிவெடுப்பவர்களாக எந்தச் சவாலையும் சந்திப்பவர்களாக இருப்பர், இதற்கு அவர்கள் வாழ்வியல் அனுபவமே காரணம் இந்த காரணங்களை வாசகர்களுக்கு கடத்தும் போது அந்த இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்த்து பெருமிதம் கொள்வர்.

மதுரைக் கதைகளில் நான் குறிப்பிட்ட அல்வாக்கடை ,மிக்சர் ஜூஸ் கடைகளை இப்போதும் பார்க்கலாம் அங்கு சென்று அதன் சுவைகளை ருசிக்கலாம் ரசிக்கலாம் ஆனால் இது கதையின் போக்கில் வெளிப்படும் இடங்களே தவிர இதனால் எனது கதைகளை மதுரைக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டியது இல்லை குறிப்பிட்ட இடங்களின் பெயர்களை மாற்றிவிட்டு பெரியகடைவீதி, பாண்டிபஜார் என்று வைத்துக் கொண்டால் எந்த ஊருக்கும் என் கதை பொருந்தும் , எந்த டீகடையாக இருந்தாலும் அங்கே விவாதிக்கப்படும் கதை மாந்தர்கள் பொருந்திப்போவர் ஆகவே எனது மதுரைக் கதைகள் மதுரைக்காரர்களுக்கு மட்டுமான கதைகள் அல்ல
அன்பும் நகைச்சுவையும் எளிமையும் குறும்பும் எனது இயல்பு எவ்வளவு சீரியசான கதைகயானாலும் அதில் ஒளிந்திருக்கும் குறும்புத்தனமான நகைச்சுவைதான் எனது பலமே அதுதான் உங்களை எங்கள் பக்கம் வசீகரிக்கிறது என்று பல வாசகர்கள் கூறியுள்ளனர் அதை கடைசி வரை காப்பாற்றுவேன்.
குன்னங் குன்னங் கூர்ர்ர்...என்று ஒரு கதை, அந்தக் கதையில் வரும் பைத்தியக்காரனின் செயலால் ஊரே காதைப்பொத்திக் கொண்டு பயப்படுகிறது ஆனால் அவனால்தான் ஒரு மரத்தை காதலிக்க முடிகிறது அது அதிகாரத்தால் வெட்டுபடாமல் காப்பாற்ற முடிகிறது அவனால்தான் காமுகர்கள் சீரழித்த ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முடிகிறது ஒடிப்போன ஒரு பெண்ணை அவள் ஒடிப்போன பெண் இல்லை தனக்கு இணையானவரை தேடிப்போன பெண் என்பதை உணர்த்த முடிகிறது அதை உரியவர்களுக்கு உணர்த்தி திருமணம் செய்துவைக்க முடிகிறது கதையின் முடிவில் பைத்தியம் அவனல்ல என்று உணர முடிகிறது.
சிறுகதைகளில் ஓர் அலாதி அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே வந்து அந்த ஆலாபணை எல்லாம் ஒரு முடிவுக்காக என ஆகும்பொழுது, சுவாரஸ்யம் கூடுகிறது. முடிவைப் படித்தவுடன் அட என மீண்டும் தான் கவனிக்கத் தவறிய அல்லது உறுதிபடுத்திக்கொள்ள மீண்டும் முதலில் இருந்து வாசிக்க வைத்தால், அது நல்ல சிறுகதை என்றாகலாம். வாசக அனுபவத்தில் பாலின வேறுபாடுகள் ஏதுமில்லை. நுட்பங்களைப் பிடித்துப் படிப்பது, தொடர் வாசிப்புப்பழக்கம் இருக்கும் அனைவருக்குமே எளிதுதான்
கவிதை,நாவல் மற்றும் சிறுகதைகள் ஆகிய மூன்று தளங்களிலும் தொடர்ந்து இயங்கும் வெகு சிலரில் நானும் ஒருவனாக இருப்பதில் மிகவும் மகிழ்கிறேன் வாசகர்கள் தரும் பேராதரவு உற்சாகம் தருகிறது, களமும் காலமும் நிறையவே இருக்கிறது..உங்கள் அன்பும் ஆதரவும் தொடரட்டும்... என்று கூறி முடித்தார்.
-எல்.முருகராஜ்