திருப்பாச்சேத்தி:சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி கண்மாய் அருகே சுடுமண்ணால் கட்டப்பட்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை ஐந்து கட்டங்களாகவும், மத்திய தொல்லியல் துறை மூன்று கட்டங்களாகவும் அகழாய்வு பணிகளை நடத்தி முடித்துள்ளனர்.
திருப்புவனத்தை மையமாக வைத்து சுற்றுவட்டார பகுதிகளில் அகழாய்வு நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு பாதை அமைக்க நேற்று முன் தினம் விவசாயிகள் பணிகள் மேற்கொண்ட போது மூன்று அடுக்குகள் கொண்ட சுடுமண்ணால் ஆன உறை கிணறு காணப்பட்டுள்ளது.
அங்கு வந்த வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து சிவகங்கை தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மீண்டும் அங்கு ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
உறைகிணற்றின் மூன்று அடுக்குகளும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் உட்புறம் விளிம்புடன் காணப்படுகிறது. கீழடியில் கிடைத்த உறைகிணறுகளுக்கும், இவற்றிற்கும் வித்தியாசம் உள்ளது.
தொல்லியல் துறை ஆய்வுக்கு பின் உறைகிணற்றின் வரலாற்றை அறியலாம்.