தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆட்டோவிற்கு வழி கேட்டு 'ஹாரன்' அடித்த டிரைவர் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
தேவகோட்டை அழகாபுரியைச் சேர்ந்தவர் சரவணன், 40. இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டுகிறார்.
நேற்று முன் தினம் மதியம் கும்மங்குடியிலிருந்து தேவகோட்டைக்கு வந்தார். வாரச்சந்தை வழியாக வந்தபோது, ரோட்டின் குறுக்கே ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது. அதை நகர்த்துவதற்காக தொடர்ந்து 'ஹாரன்' அடித்தார். அப்போது பைக்கை எடுக்க வந்த ஜெயபாண்டியனுக்கும், ஆட்டோ டிரைவர் சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டது.
ஜெயபாண்டியன், நண்பர் மொக்கானிக் பழனியப்பனுடன் சேர்ந்து சரவணனை சரமாரியாகத் தாக்கினார். பலத்த காயம் அடைந்த சரவணன், அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து, தேவகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பழனியப்பனை கைது செய்தனர். தலைமறைவான ஜெயபாண்டியை தேடுகின்றனர்.