தஞ்சாவூர்:''அ.தி.மு.க.,வில் உள்ள களை எடுக்கப்பட்டு விட்டது. இனி அ.தி.மு.க., எனும் பயிர் நன்றாக வளர்ந்து, நல்ல விளைச்சலை கொடுக்கும்,'' என்று முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
தஞ்சாவூரில், முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழா நடந்தது. இதில், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்., கட்சித்தலைவர் வாசன், முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், பழனிசாமி பேசியதாவது:
டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காண, மறைந்த முதல்வர் ஜெயலிலதா தீவிர சட்டப் போராட்டம் நடத்தினார்.
அவர் மறைவுக்குப் பின், 50 ஆண்டு கால காவிரி நதிநீர் பிரச்னையில் தனிக்கவனம் செலுத்தி, அதற்கு தீர்வு கண்டது அ.தி.மு.க., அரசு.
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மீத்தேன், ஹைட்ரோகார்பன் பிரச்னையால் அச்சத்தில் வாழ்ந்தனர். அவர்களுக்காக, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அ.தி.மு.க., அரசு தான் அறிவித்தது.
நான் முதல்வராக இருந்த போது, 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினேன். ஆனால் இன்றுள்ள அரசு, அதற்கு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. மின் தட்டுப்பாடு இல்லை என சொல்லும் அரசு, எதற்காக நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்காகவும் பாடுபடும் கட்சி அ.தி.மு.க.,தான். நெற்பயிர் சிறப்பாக வளர வேண்டும் என்றால், நடவு முடிந்த சில குறிப்பிட்ட நாட்களில் களைகள் எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.,வில் உள்ள களைகள் எடுக்கப்பட்டு விட்டன. இனி, அ.தி.மு.க., என்னும் பயிர், நன்றாக செழித்து வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.
இன்றைக்கு சிலர் தன் சொந்த நலனுக்காக அரசியலில் இருக்கின்றனர். ஆனால் பலர், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா விட்டுச் சென்ற கட்சிப் பணி தொடர வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் அ.தி.மு.க.,வில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வில் தனிமனித ஆதிக்கம் கிடையாது. நான் இதுவரை தலைவர் என்ற வார்த்தையை கூறியது கிடையாது. எப்போதும் தொண்டன்தான். அ.தி.மு.க,வை யாராலும் அழிக்க முடியாது.
பழனிசாமி இல்லாவிட்டால், வேறு யாராவது ஒருவர் அ.தி.மு.க.,வை நிர்வகிப்பர். தொண்டர்கள் இருக்கும் வரை இந்தக் கட்சியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை இந்தக் கட்சிக்கு யாராலும் உரிமை கொண்டாட முடியாது, தொண்டர்கள் ஆசீர்வாதத்தோடு மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலருமான பழனிசாமி, நேற்று முன் தினம் சேலத்தில் இருந்து துறையூர் வழியாக வந்தார்.அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி நிர்வாகி சாமிக்கண்ணு தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், கையில் கறுப்புக் கொடியுடன், துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கூடினர். தகவலறிந்த துறையூர் போலீசார் அவர்களை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.