மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஏப்.3 ல் போராட்டம் நடக்க உள்ளது.
மதுரையில் இச்சங்க மண்டல கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின் கவுரவ பொதுச் செயலாளர் குப்புசாமி, பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன், நலப்பிரிவு மாநில பொது செயலாளர் முத்துபாண்டியன், செய்தி தொடர்பு செயலாளர் ஆசிரியதேவன், துணை தலைவர் நடராஜன் கூறியதாவது:
கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டுள்ள பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்களுக்கு உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்க நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். நகர கூட்டுறவு பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் டிச.,31 2021 ல் முடிந்தது. அவர்களுக்கு ஜன.,1 2022 முதல் புதிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் மார்ச் 31, 2023ல் முடிவடைய உள்ளதால் ஏப்ரல் 1 முதல் புதிய ஊதிய விகிதத்தை மாற்றியமைத்திடும் வகையில் ஊதிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தந்த சங்கங்களில் ஏற்படும் காலி இடங்களைப் பொறுத்து பல ஆண்டுகள் காத்திருந்து பதவி உயர்வு பெற வேண்டியுள்ளது. இதனை போக்க மாவட்ட வாரியாக பணிமூப்பு பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க விதிகளில் திருத்தம் ஏற்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.,3ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடத்தி முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு மனு அனுப்ப உள்ளோம்.
ஏப்.,24ல் பணியாளர்கள் குடும்பத்துடன் சேர்ந்து ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்கும் பேரணியை சென்னையில் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.