நடைபாதை ஆக்கிரமிப்பு
வால்பாறை நகரில், மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்பு செய்வதை நகராட்சி அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சாரதி, வால்பாறை.
வீணாகும் அறிவிப்பு பலகை
சமத்துார் அடுத்துள்ள, மணல் மேடு பகுதியில் தனியார் பள்ளி அருகே உள்ள எச்சரிக்கை அறிவிப்பு பலகையை, ரோடு விரிவாக பணியின் போது பெயர்த்து எடுக்கப்பட்டது. தற்போது வரை அந்த அறிவிப்பு பலகை உரிய இடத்தில் வைக்காமல் உள்ளது. இதனால், ரோட்டோரத்தில் வீணாகிறது.
- -ஆனந்த், மாக்கினாம்பட்டி.
ரோட்டோரத்தில் மதுபாட்டில்
கிணத்துக்கடவில் உள்ள, சினிமா தியேட்டர் அருகில், ரோட்டோரத்தில், அதிகளவு காலி மது பாட்டில்கள் கிடக்கிறது. 'குடி'மகன்கள் இங்கு அமர்ந்து குடித்துவிட்டு காலி பாட்டில்க ைள வீசி செல்வதால், இந்த வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.
- -சசி, கிணத்துக்கடவு.
ஒளிராத மின்விளக்கு
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, பிரஸ் காலனியில், கடந்த மூன்று நாட்களாக தெரு விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து விடுகிறது. இரவு நேரங்களில் பாம்பு நடமாட்டம் அதிகம் உள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மின்விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- -நரிமுருகன், சூளேஸ்வரன்பட்டி.
திறக்காத கழிப்பிடம்
வால்பாறை அடுத்துள்ள, ரொட்டிக்கடை பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பிடம், பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, சுற்றுலா பயணியர் நலன் கருதி கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -அகில், அய்யர்பாடி எஸ்டேட்.
ரோடு படுமோசம்
பொள்ளாச்சி, ராஜா மில் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டுனர்கள் வளைந்து நெளிந்து, சர்க்கஸ் செய்துதான் வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது. ரோட்டில், குழிகளிலும், பாதாள சாக்கடை மூடி அருகிலுள்ள பள்ளங்களில் இருந்தும் தப்பித்து செல்ல வேண்டியிருக்கிறது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கும் நிலைமை மாற நகராட்சி அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பூங்கொடி, பொள்ளாச்சி.
குழிகளால் ஆபத்து
பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பில் பெரிய குழி உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகம் கவனித்து, இங்குள்ள குழியை வாகன ஓட்டுனர்களின் நலன் கருதி உடனடியாக சீரமைக்க வேண்டும்.
- -தம்பு, நெகமம்.
ஒளிபிரதிபலிப்பான் தேவை
கோவில்பாளையம் - நெகமம் செல்லும் வழித்தடத்தில், வளைவுகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் பயணிக்க சிரமமாக உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டின் இருபக்கத்திலும் ஒளிபிரதிபலிப்பான் பொருத்தப்படவேண்டும்.
- -வெங்கடாசலம், கோவில்பாளையம்.
சுகாதாரம் பாதிப்பு
பொள்ளாச்சி, சி.டி.சி., மேடு பஸ் ஸ்டாப் அருகே, குப்பை குவிக்கப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதாரம் பாதித்து, தொற்றுநோய் அபாயமும் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணியர் நலன் கருதி, குப்பையை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
- -சபரி, பொள்ளாச்சி.