பொள்ளாச்சி:பிளஸ் 1, கணக்குப்பதிவியல் மற்றும் வேதியியல் பொதுத்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த, 14ம் தேதி துவங்கியது. நேற்று, வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடத்துக்கான தேர்வு நடந்தது. பொதுத்தேர்வு எழுத மாணவர்கள், 3,119, மாணவியர், 4,169 என மொத்தம், 7,288 பேர் விண்ணப்பித்தனர்.
அதில் மாணவர்கள், 3,053, மாணவியர், 4,062 என மொத்தம், 7,115 பேர் தேர்வு எழுதினர்.மாணவர்கள், 66, மாணவியர், 107, என, மொத்தம், 173 பேர் தேர்வு எழுதவில்லை.
தேர்வு எப்படி இருந்தது
தனுஸ்ரீ, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி: கணக்குப்பதிவியல் பாட தேர்வு மிக எளிதாக இருந்தது. தெரிந்த வினாக்களே அதிகளவு இடம் பெற்று இருந்தன. எதிர்பார்த்ததை விட மிக எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வெழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கீர்த்திகா, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி: கணக்குப்பதிவியல் தேர்வு கடினமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், மிக எளிமையாக இருந்தது. பள்ளியில் நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களும், இடம் பெற்று இருந்தன.முழு மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதியுள்ளதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
அபிநயா, கந்தசாமி மெட்ரிக் பள்ளி, கணபதிபாளையம்: கணக்குப்பதிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில் மூன்று அகவினாவாக இருந்தது. ஏற்கனவே பயிற்சி பெற்றதால், எளிமையாகவும், எழுதும்படியாகவும் இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா மட்டும், பாடத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டு இருந்தது.மூன்று மதிப்பெண் வினாவிலும், கட்டாய வினா, அகவினாவாக கேட்கப்பட்டு இருந்தன. ஏற்கனவே பயிற்சி பெற்ற வினாக்களாக இருந்ததால், நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன்.
மதுமிதா, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி: வேதியியல் பாட தேர்வு மிக எளிதாக இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் மட்டும் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததால் கடினமாக இருந்தது. மற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்ததால் மகிழ்ச்சியுடன் தேர்வெழுதியுள்ளேன்.நல்ல மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.
பவித்ரா, மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி: வேதியியல் தேர்வில், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மட்டும், பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்ததால், கடினமாக தெரிந்தது.ஒரு மதிப்பெண் வினா உள்ளிட்ட மற்ற வினாக்கள் எளிமையாக இருந்தன. நல்லமுறையில் தேர்வு எழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
கோகுல்ராஜ், கந்தசாமி மெட்ரிக் பள்ளி: வேதியியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் இரண்டு, புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டு இருந்தன. உள் பகுதியில் இருந்து கேட்கப்பட்டாலும், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் கட்டாய வினாக்களும் எளிமையாக இருந்தன.
ஸ்ரீமகாலட்சுமி, அக் ஷயா அகாடமி பள்ளி, செங்குட்டைபாளையம்: கணக்குப்பதிவியல் தேர்வு எளிமையாக இருந்தது. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு எழுதி முடிக்க முடிந்தது. அனைத்து விதமான வினாக்களுக்கும் பதில் எழுதி இருக்கிறேன். நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஹரீஸ் அகஸ்டின்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு: வேதியியல் தேர்வு நன்றாக எழுதி உள்ளேன். இரண்டு மதிப்பெண் வினாக்கள் இரண்டு மட்டும் சற்று கடினமாக இருந்தது. ஆனாலும், நன்றாக எழுதி உள்ளேன். மற்ற மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எழுதும் படி இருந்தது. தேர்வினை, 15 நிமிடம் முன்பாக முடிக்க முடிந்தது.
லாவண்யா, துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை: வேதியியல் தேர்வு மிக கடினமாக இருக்குமோ என நினைத்து சென்றேன். ஆனால், வினாத்தாளை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. படித்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை தெளிவாகவும், விரைவாகவும் எழுதியுள்ளேன். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பத்மபிரியா, துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை: கணக்குப்பதிவியல் பாடத்தில் எதிர்பார்த்தபடியே அனைத்து வினாக்களும் மிக எளிமையாக இருந்தன. பள்ளியில் ஆசிரியர் சொல்லித்தந்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை பயமின்றி எழுதினேன். இது வரை எழுதிய தேர்வை விட இந்த தேர்வு எளிதாக இருந்தது. முழுமதிப்பெண் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.