பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழாவில், கதை சொல்லல் நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனுார், அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.கடந்த, 2022 -- 23ம் ஆண்டில் தமிழ் இலக்கிய மன்றம் மாதம்தோறும் கூடி பல நல்ல செயல்பாடுகளை செய்து வந்தது.
நடப்பு கல்வியாண்டில் மன்றத்தின் கடைசி கூட்டம், குழந்தைகளை குதுாகளிக்க வைக்கும் கதை சொல்லல் நிகழ்வாக நடந்தது.
மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த கதை சொல்லி பூங்கொடி பங்கேற்று, குழந்தைகளுக்கு கதைகளை கூறினார். பேய்க்கதை, இயற்கையை நேசித்தல், பறவைகளின் கதைகள், என கண் முன்னே குழந்தைகளுக்கு குரல் மொழியாலும், உடல் மொழியாலும் புது அனுபவத்தை தந்தார்.
எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய பேய் கதையை சிறுவயது எழுத்தாளர் ஸ்ரீராம் கூறினார். மேலும், குழந்தைகளை கதை சொல்ல சொல்லி உற்சாகம் தந்தார். கதை கூறிய அனைத்து குழந்தைகளுக்கும் சிறார் நுால்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் பாலமுருகன் நன்றிகூறினார்.