சென்னை, சென்னை சூளை, சைடன்ஹாம் சாலையில், கஞ்சா விற்பனை நடப்பதாக, 2019 ஆக., 15ல் போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, புளியந்தோப்பில் இருந்து சென்ட்ரல் செல்லும் சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த ஆட்டோவில் 3.2 கிலோ கஞ்சா மற்றும் 2.52 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கஞ்சா, பணத்தை பறிமுதல் செய்த பெரியமேடு போலீசார், ஆட்டோவில் இருந்த முத்துலட்சுமி, 32, காந்திமதி, 29, ஆனந்தவல்லி, 32, ஆட்டோ ஓட்டிய கோகுல்தாஸ், 28, மற்றும் இருசக்கர வாகனத்தில் உளவு பார்த்த நபர்களான சரண், 28.
மேலும், முனியம்மாள், 48, கஞ்சா விற்பனையில் தொடர்புடைய மணிவண்ணன், 40, வேலழகி, 57, கணேஷ், 32, உள்ளிட்டோர் மீது, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் சார்பில் வழக்கறிஞர் டி.எஸ்.சீனிவாசனும், போலீசார் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன் ஆஜராகினர்.
விசாரணை காலத்தில் மணிவண்ணன் இறந்துவிட்டதால், மற்ற எட்டு பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'இதில், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் முத்துலட்சுமிக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
மற்ற ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்' என தீர்ப்பளித்தார்.