பொள்ளாச்சி:'சிறு கட்டுமானப்பணிகளில், சிமென்ட், பெயின்ட், டைல்ஸ் மற்றும் கம்பி தயாரிக்கும் பெருநிறுவனங்கள் ஈடுபடுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, என, இன்ஜினியர்ஸ் கிளப் வலியுறுத்தியுள்ளது.
இன்ஜினியர்ஸ் கிளப் தமிழ்நாடு சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது. மாநில தலைவர் செல்வதுரை தலைமை வகித்தார். மாநில செயலாளர் ரமேஷ் வரவேற்றார். அதில், தமிழகம் தழுவிய கட்டுமான தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
சிமென்ட், கம்பி, பெயின்ட், டைல்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சிறு, சிறு கடுமான பணிகளை நேரடியாக எடுத்து செய்கிறது. தற்போதைய சூழலில், கட்டடம் கட்ட சதுர அடிக்கு குறைந்த பட்சம், 2,400 வரை செலவாகும். ஆனால், கவர்ச்சிகரமான போலி விளம்பரங்களை கொடுத்து, சதுரடிக்கு, 1,900 என நடுத்தர மக்களை குறி வைத்து தங்களது பக்கம் திசை திருப்புகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நமக்குபோட்டியாக, சிறு கட்டுமான தொழிலில் ஈடுபடும் பெரு நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களான, சிமென்ட், கம்பி, டைல்ஸ் மற்றும் பெயின்ட் ஆகியவை அனைத்து பொறியாளர்களும் புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து, சங்கத்தின் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பியள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நடுத்தர வளரும் கட்டட பொறியாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாக, பெரு நிறுவனங்கள், சிறு, சிறு கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதை அரசு நேரடி கவனத்தில் கொண்டு, தடை செய்ய வேண்டும்.
கட்டுமான தொழில் சம்பந்தமான தொழில்நுட்ப படிப்பு பயிலாத யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் அவல நிலை உள்ளது. அனைத்து பொறியாளர் சங்கங்களின் நீண்டநாள் கோரிக்கையான, 'சிவில் இன்ஜினியர்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு' என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
எந்தவித கட்டுமான பணிகளை, கவுன்சில் பதிவு செய்த கட்டடபொறியாளர்கள் வாயிலாக மேற்கொள்வது என்றநடைமுறையைகொண்டுவர வேண்டும். அப்போது தான், கட்டுமான தொழிலையும், இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதுகாக்க முடியும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.