வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:வேலுார் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையத்தை, 329.32 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் உயர்த்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பணிகள், 2026ல் முடியும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வேயின் மறுசீரமைப்பு திட்டத்தில் எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
காட்பாடி ரயில் நிலையத்தை, 329.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மேம்படுத்த, தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, 2022 செப்டம்பரில் பணி ஆணை வழங்கப்பட்டது.
![]()
|
இந்நிலையில், மண் பரிசோதனை, நிலம் அளவீடு செய்வது போன்ற ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து, அடுத்த கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் காட்பாடி ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு, பயணியர் மற்றும் ரயில் இயக்கத்திற்காக போதிய கட்டமைப்பு வசதிகளை, சர்வதேச அளவில் தரம் உயர்த்த உள்ளோம்.
இரண்டு பிரமாண்ட கட்டடங்கள், பஸ் நிலைய வளாகம், வசதியான காத்திருப்பு அறைகள், உணவ கங்கள், பிரமாண்ட வாகன நிறுத்தம், 'எஸ்கலேட்டர்'கள், நடைமேம்பாலம், 'லிப்ட்'கள், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், உள்ளூர் பொருள் விற்பனை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்த உள்ளோம்.
பணிகள் அனைத்தும், 2026க்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.