உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
ஜி.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'நான் வீர் சாவர்க்கர் அல்ல; காந்தி. அதனால், மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்று தெரிவித்துள்ளார்,அவதுாறு வழக்கில் இரண்டாண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல்.
ஆமாம் ராகுல் அவர்களே... நீங்கள் சொல்வது சரிதான்; நியாயம் தான். சுதந்திரத்துக்காக கொடி பிடித்து, தன் வாழ்நாளில் பாதியை, அந்தமான் செல்லுலார் சிறையில் கழித்த, வீர் சாவர்க்கராக நீங்கள் எப்படி இருக்க முடியும்? அரசியலில் அவ்வப்போது தலையை காண்பித்து, 'இதோ நானும் இருக்கேன்'னு, 'சீன்' போடும் நீங்கள் எப்படி, அந்த தியாக வீரருக்கு சமமானவராக முடியும்?
![]()
|
சுய புத்தி இல்லாமல் பேசுவதோடு, ஆண்டில் பாதி நாட்கள் வெளிநாட்டு பயணம்மேற்கொள்பவர் நீங்கள். உங்களுக்கு தெரிந்தது எல்லாம், அரண்மனை, 'ஏசி' வாழ்க்கை, இத்தாலியன் உணவு. அதற்கேற்ற வகையில், உங்களுக்கு செல்லம் கொடுத்து கெடுத்துள்ளானர், உங்களின் தாயார் சோனியா மற்றும் சகோதரி பிரியங்கா. அந்தமான் செல்லுலார் சிறையையே பார்த்திராத நீங்கள், அவரை பற்றி பேசுவது சரியா?
வீர் சாவர்க்கர் பெயரை சொல்லவே, ஒரு தகுதி வேண்டும்... அது ஊழலுக்கு பெயர் பெற்ற, ஊரை விற்று உலையில் போட்ட, காங்கிரஸ் கட்சிக்கோ, அந்தக் கட்சியைச் சேர்ந்த உங்களுக்கோ சுத்தமாக கிடையாது. நீங்கள் வேண்டுமானால், 'மாபியா' கும்பல், ஊழல் பேர் வழிகள் பற்றி பேசலாம்; அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது.
'நான் காந்தி; மன்னிப்பு கேட்க மாட்டேன்' என்கிறீங்க... எந்தக் 'காந்தியை குறிப்பிடுகிறீர்கள்? உப்புச் சத்தியாகிரகம் செய்த தேசப்பிதா காந்தியா இல்லை... தனக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால், நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்து, ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த, உங்களின் பாட்டி இந்திராவை பற்றி சொல்கிறீர்களா?
அதுவும் இல்லையெனில், போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் சிக்கி, ஊரே கைகொட்டி சிரித்த, உங்களின் அப்பா ராஜிவை பற்றி சொல்கிறீர்களா? நீங்கள் தலைகீழாக நின்றாலும், ஒரு போதும் விடுதலைத் தியாகி வீர் சாவர்க்கராக முடியவே முடியாது.
அதேபோல, நீங்கள் வாழ்நாள் முழுதும் உருண்டு புரண்டாலும், அந்த உத்தமர், தேசப்பிதா மகாத்மா காந்தியாகவும் முடியவே முடியாது. நீங்கள் வேண்டுமானால், நாட்டை கொள்ளையடிக்க துணை போன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று, காலரை துாக்கி விட்டு கொள்ளலாம்.