திருப்பூர்:'ரேஷன் அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கலெக்டர் வினீத் தலைமையில் நடந்த மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில், பல்வேறு நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்று, பல யோசனைகளை முன்வைத்தனர்.
அதில், பங்கேற்ற திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் காதர்பாட்ஷா கூறியதாவது:
நாங்கள் முன்வைத்த கோரிக்கை அடிப்படையில், ஞாயிறு விடுமுறையின் போது, வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கி, கள்ளச்சந்தைக்கு வழங்கும் செயல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை, 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேஷன் கடைகளில், அரிசி மூட்டைகளின் மீது ஈரக்கசிவு ஏற்படாமல் இருக்க, ஈரம் உறிஞ்சும் விரிப்புகள், அரசு சார்பில் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் அதே நேரம், ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என, கலெக்டர் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.