சென்னை:நிதி அமைச்சர் தியாகராஜன் பேச்சுக்கு, தலைமைச் செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:
சட்டசபையில் அமைச்சர் தியாகராஜன் பேசும்போது, 'தற்காலிக பணியாளர்கள், 5,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர். ஆனால், முழு நேர ஊழியர்கள் லட்சம் ரூபாய் வாங்குகின்றனர். இது நியாயமல்ல' என, கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டது அரசாணை எண் 115. இந்த அரசாணை, அரசால் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாகவும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பை தகர்க்கும் விதமாகவும் இருந்தது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்யும்படி கோரினோம். அதை ஏற்று, முதல்வர் ரத்து செய்தார்.
அதை அமைச்சர் மீண்டும் குறிப்பிட்டு, அந்த அரசாணை சரியான ஆய்வு வரம்புகளோடு வெளியிடப்பட்டது என, பேசி உள்ளார். இது மனிதவள மேலாண்மைத் துறை, முழுக்க 'கார்ப்பரேட்' பாதையில் பயணிப்பதை தெளிவுபடுத்தி உள்ளது.
வெளி முகமை வழியாக பணியாளர்களை பணி அமர்த்தும்போது, 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாது. முழு நேரப் பணியாளர்கள், பல லட்சம் ரூபாய் வாங்குகின்றனர் என குறிப்பிட்டு, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீதான தன் வெறுப்பை வெளிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.