- நமது நிருபர் -
ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில், நிர்வாக கட்டமைப்பு முழுமையடையாத நிலையில், அவிநாசி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட சில பேரூராட்சிகள், கடந்தாண்டு பிப்., மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, அவிநாசி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. 18 வார்டுகளை உள்ளடக்கிய இப்பேரூராட்சியில், தற்போதைய மக்கள் தொகை, 33 ஆயிரத்து 600 என கணக்கிடப்பட்டுள்ளது.
துாய்மைப் பணியாளர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன், மயான பராமரிப்பு, பஸ் ஸ்டாண்ட், சந்தை சுங்கம் வசூல், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, 26 நிரந்தர பணியாளர்கள் மற்றும், 110 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர்.
ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட பூண்டி நகராட்சியில் கமிஷனர், பொறியாளர் உள்ளிட்ட ஒரு சில பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. நிர்வாக கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படாததால், நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் கூட சிக்கல் தென்படுகிறது. இதனால் கவுன்சிலர்கள், நகராட்சி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அவிநாசி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்துவதை மக்கள் வரவேற்றாலும், பூண்டி நகராட்சியில் நிலவும் பிரச்னை, அங்கும் வந்துவிடக் கூடாது என்கின்றனர்.
மக்களுக்கான தேவைகளுக்கு தீர்வு காணும் வகையில், நகராட்சிக்குரிய முழு கட்டமைப்புடன் உரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட நிர்வாக கட்டமைப்புடன், தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்ட பூண்டி நகராட்சியில் கமிஷனர், பொறியாளர் உள்ளிட்ட ஒரு சில பணியிடங்கள் மட்டுமே நிரப்பபட்டுள்ளன. நிர்வாக கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படாததால், நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.