சென்னை:ஐந்தாண்டு பதவிக் காலம் முடிவடைய உள்ள, 4,684 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படாததால், விரைவில் செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில், 23 ஆயிரத்து, 149 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களுக்கு, 2018ல் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அவற்றின் ஐந்தாண்டு பதவிக் காலம், ஏப்ரலில் துவங்கி ஆகஸ்டில் முடிவடைகிறது.
பதவிக் காலம் முடிவடையும் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தகுதியுள்ள உறுப்பினர் பட்டியலை வெளியிட்டு தேர்தலை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிகிறது. நீதிமன்ற வழக்கால் தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை.
எனவே, ஏப்., 2ம் தேதியுடன் பதவிக் காலம் முடிவடையும் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டும் செயல் அலுவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.