பழநி: பழநி வையாபுரி குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க ஆர்.டி.ஓ., சிவகுமார் அறிவுறுத்தினார்.
பழநி வையாபுரி குளம் துாய்மை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெற்றது.
வையாபுரி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர், கழிவு பொருட்கள் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தில் உள்ள தெப்பத்தை சீரமைக்க கோயில் நிர்வாகம் முன் வர வேண்டும் என விவசாயிகள் கோரினர்.
ஆர்.டி.ஒ., சிவகுமார் பேசுகையில்,திடக்கழிவு மேலாண்மையை குளத்தை சுற்றிய நிறுவனங்கள்,விடுதிகள், திருமண மண்டபங்களில் கடைப்பிடிக்க வேண்டும்.
பயோ டாய்லெட் முறையை பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்படாமல் குளத்தில் கழிவு நீரை வெளியேற்றும் நிறுவனங்களை சீல் வைத்து கடும் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்,என்றார்.
நகராட்சி பொறியாளர் வெற்றிச்செல்வி கூறுகையில், குப்பை கிடங்கு அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான தீர்மானம் நகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டு கவுன்சிலர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். வையாபுரி குளத்தை மேம்படுத்த ரூ.143 கோடிக்கு திட்ட மதிப்பீடு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கும்,'' என்றார்.
கோயில் துணை ஆணையர் பிரகாஷ் கூறுகையில், பழநி கோயில் நிர்வாகம் வையாபுரி குளத்தில் துாய்மை பணியில் பங்களிப்பு செலுத்த தயாராக உள்ளது. தெப்பம் குறித்து ஆவணங்களை சரி பார்த்தபின் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தாசில்தார் சசி, பழநி கோயில் துணை ஆணையர் பிரகாஷ்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, நகராட்சி கமிஷனர் கமலா, குளத்து பாசன விவசாயிகள் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டனர்.