கோவை:கோவையில் உள்ள பல்வேறு உழவர் சந்தைகளிலும், இரண்டு தரங்களில் காய்கறிகளை வைத்து, இரண்டு விதமான விலைகளில் விவசாயிகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கோவை நகரில், சிங்காநல்லுார், ஆர்.எஸ்.புரம், சுந்தராபுரம், வடவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், உழவர் சந்தைகள் செயல் படுகின்றன. இவற்றில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலருக்கும் வேளாண் துறையின் சார்பில், அடையாள அட்டை வழங்கப்பட்டு,சமவெளி மற்றும் மலைக்காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புகார்கள்
தரமான, புத்துணர்ச்சியுள்ள காய்கறிகள், குறைவான விலையில் கிடைப்பதால், இந்த உழவர் சந்தைகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பும் உள்ளது. இந்த உழவர்சந்தைகளில், விவசாயிகளின் பெயர்களில் வியாபாரிகள் பலரும் ஊடுருவியுள்ளதாக, நீண்டகாலமாகவே புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
ஆனாலும் வெளியில் சந்தையில் விற்கும் விலையை விட, குறைவான விலையில், தரமான காய்கறிகள் கிடைப்பதால், மக்கள் இங்கு குவிகின்றனர். இதைப் பயன்படுத்தி, சமீபகாலமாக நுாதன முறையில் மக்கள் ஏமாற்றப்படுவதாக பரவலாக புகார் கிளம்பியுள்ளது.
காலையில் உழவர் சந்தை அதிகாரிகளால், தனித்தனியாக காய்கறிகளுக்கு ஒரு கிலோ விலை எவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டு, அந்த கடையின் அறிவிப்புப் பலகையில் எழுதப்படுகிறது.
உண்மையில் மக்கள் வாங்கும்போது, அந்த விலைக்குரிய தரத்தில் அந்த காய்கறிகள் இருப்பதில்லை. தரமான காய்கறிகளை அதிகாரிகளிடம் காண்பித்து விலை நிர்ணயிக்கும் கடைக்காரர்கள், அதைத் தனியாக ஓட்டல்காரர்கள், சிறு வியாபாரிகளுக்கு எடுத்து வைத்து விடுகின்றனர். பொதுமக்களிடம், இரண்டாம் தரமான காய்கறிகளை, நிர்ணயித்த விலைக்கு விற்கின்றனர். அந்த மூட்டையில் உள்ள காய்கறிகளைக் கேட்டால், அதற்கு அதிகமான விலை சொல்கின்றனர்.
இதனால் பல்வேறு கடைகளிலும், பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடக்கிறது.
உழவர் சந்தை அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையில் 'இணக்கம்' இருப்பதால், மக்கள் சொல்லும் புகார்களின் மீது உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை. குறிப்பாக, வடவள்ளி உழவர்சந்தையில் இந்த புகார் அதிகளவில் எழுந்துள்ளது.
சாதனை திட்டம்
இத்தனைக்கும் வடவள்ளி உழவர்சந்தைக்குதான், கடந்த ஆண்டில், 'க்ளீன் அண்ட் பிரஷ்' பழம் மற்றும் காய்கறி சந்தை என்ற சான்றை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்(fssai) வழங்கி அங்கீகரித்துள்ளது. அங்குள்ள 60 கடைகளில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு,எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சார்பில் சான்று மற்றும் லைசென்சும் வழங்கப்பட்டுள்ளது. அந்த அங்கீகாரம், 2024 ஜூலை 28 வரையிலும் இருக்கும் நிலையில், அங்குதான் இப்போது ஏராளமான முறைகேடுகள் நடக்கத் துவங்கியுள்ளன.
பொது மக்கள் சார்பில், பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதேபோன்று, ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லுார் உழவர் சந்தைகளில், தரம் குறைவான காய்கறிகளுக்கு, வெளிச்சந்தையை விட அதிகமான விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க.,அரசின் சாதனைத் திட்டமாக வர்ணிக்கப்படும், உழவர் சந்தைகள், மக்களுக்கு வேதனை தரும் இடமாக மாறும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளின் அதிமுக்கியக் கடமையாகும்.