மலுமிச்சம்பட்டி;ஒத்தக்கால்மண்டபத்திலுள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 24ல் விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. 25ல் நவகோள்கள் சிறப்பு வழிபாடு, யாக சாலை கலசங்கள் ஸ்தாபித்தல், மகாலட்சுமி அம்மன் பரிவாரங்களோடு கலசத்தில் எழுந்தருளி வேள்விச்சாலை புகுதல் உள்ளிட்டவை நடந்தன.
இரண்டாம் கால வேள்வி துவக்கம், அஷ்டபந்தனம், தத்துவ சுத்தி, தத்துவ யாகம் உள்ளிட்டவை நடந்தன. நான்காம் கால வேள்வி துவக்கம், யாக சமர்ப்பணம், கலசங்கள் புறப்படுதல் நடந்தன.
தொடர்ந்து விமான கோபுரங்களுக்கும், விநாயகர், ஆஞ்சநேயருக்கும் நிறைவாக மகாலட்சுமி அம்மனுக்கும் கும்பாபிஷேகம், ராஜப்ப குருக்களால் செய்து வைக்கப்பட்டது.
இதையடுத்து திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள், அன்னதானம், மதியம் பாலிகை கங்கணம் விடுதல், பிரசாதம் வழங்குதல் நடந்தன. திரளானோர் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
இன்று முதல், 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.